காமிரா கண்கள்

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஃபோட்டோ பிடிக்கலாமா?

பேராச்சி கண்ணன்

காலத்தின் சாட்சியாக மட்டுமல்ல; கடந்த காலத்தைப் பார்ப்பவர்களுக்கு மனதில் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தக் கூடியது புகைப்பட ஆவணப் பதிவுகள் மட்டுமே” -  கண்களில் நம்பிக்கை கீற்றுகள் மின்னப் பேசும் வினோத் பாலுச்சாமியும் லட்சுமணராஜாவும் திருமணப் புகைப்பட ஆவணக் கலையில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் தமிழகத்து இளைஞர்கள். தென்னிந்தியா முழுவுதிலும் இருந்து திருமணப் புகைப்படங்களை எடுக்க இவர்களுக்கு ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிலென்ன சிறப்பு உள்ளது என்கிறீர்களா? இவர்கள் எடுக்கும் படங்கள் மற்ற புகைப்படக்காரர்கள் போல் இருக்காது என்பது தான்.

“திருமணம் என்பது நமது கலாச்சாரத்தின் அடையாளம். நாங்கள் மற்றவர்களைப் போல் திருநீறு பூசுதல், அனைவரையும் நிற்க வைத்து எடுத்தல் என சம்பிரதாயங்களாக செய்யப்படும் முறைகளை எடுப்பதில்லை. மாறாக அந்தக் கல்யாணத்தில் நிகழும் கலாச்சார நிகழ்வுகள், மணமகன், மணமகளின் முகபாவனைகள், குடும்ப உறவுகளின் குதூகலம், குழந்தைகளின் விளையாட்டு, தாய், தந்தையின் சந்தோஷம், தாய் மாமன் உறவு போன்ற எல்லோருடைய உணர்வுகளும் அன்றைய தினம் எப்படி இருந்தது என்பதை ஒரு கதை சொல்லியாக புகைப்படங்களைப் பதிவு செய்கிறோம். முதலில் இருந்து புகைப்படங்களை ஆவணப்படுத்திக் கோர்த்து ஆல்பத்தை தயார் செய்து கொடுக்கிறோம். இதுதான் எங்களின் தனிசிறப்பு” எனும் வினோத் பாலுச்சாமி விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்தவர். மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., தொடர்பியல் பயின்றவர். புகைப்படக் கலையில் ஏற்பட்ட ஆர்வத்தால் இந்தியா முழுவதும் பயணித்து புகைப்படங்களையும் கூடவே ஆவணப்படங்களையும் எடுப்பதைத் தொழிலாக செய்து வருகிறார்.

“நானும் வினோத்தும் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது சந்தித்தோம். நான் பி.இ., கணினி படித்துவிட்டு மென்பொறியாளராக ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். புகைப்படக் கலையில் ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து இதற்கென உள்ள சில கிளப்களுக்கு சென்று புகைப்படம் எடுப்பதைக் நன்கு கற்றுக் கொண்டேன். தொடர்ந்து நிறைய பயணங்கள் செய்தேன். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள மக்களை புகைப்படம் எடுத்தேன். பிறகு 2010ல் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேரப் புகைப்படக் கலைஞன் ஆனேன். அந்தநேரத்தில் தான் நானும் வினோத்தும் இணைந்து ‘கூழாங்கற்கள்’ என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி திருமணப் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தோம்” எனும் லட்சுமணராஜா கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர். தற்போது திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியனிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

“வெளிநாடுகளில் வெட்டிங் போட்டோ ஜர்னலிசம்  என்ற ஒரு பிரிவே உள்ளது. எங்களைப் போல் புகைப்படங்கள் எடுக்கும் முறை அது. நாங்கள் வழக்கத்தை விட எப்படி செய்யலாம் என்று யோசிக்கும் போது கிடைத்த விஷயம் தான் இந்த வித்தியாசமான முறை. நமது மரபு சார்ந்து புகைப்படங்களை அவர்கள் விரும்பும் வண்ணம் எடுத்து தருகிறோம். திருமணத்திற்கு பிறகு அவர்கள் விரும்பும் இடத்திற்கெல்லாம் சென்று புகைப்படங்களை எடுக்கிறோம். எங்கள் ஆல்பங்களைப் பார்த்து ஒரு குடும்பத்து பெரியவர் என்னிடம் சொன்னார், ‘தம்பி, இவ்வளவு அழகா யதார்த்தமா என்னை நான் பார்த்ததேயில்ல’. எனக்கு ரொம்பவே வியப்பாக இருந்தது. புகைப்படப் பதிவுகளில், அவர்களை அவர்களே யதார்த்தமாக முதல் முறை இப்போதுதான் பார்க்கிறார்கள் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது” நெகிழ்ச்சியுடன் பேசும் வினோத் பாலுச்சாமியை தொடர்கிறார் லட்சுமணராஜா.

“நாங்கள் இதை வியாபார நோக்குடன் செய்யவில்லை. இதை ஒரு கலையாகவே பார்க்கிறோம். நாங்கள் இப்படி தான் எடுப்போம் என்ற பார்முலா வைத்திருக்கிறோம். அதனால் அழைப்பவர்களுக்கு முதலிலேயே நாங்கள் எடுத்த மற்ற திருமணப் புகைப்படங்களை காட்டிவிடுவோம். அவர்களுக்கு பிடித்திருந்தால் செய்கிறோம். இல்லையென்றால் வேண்டாம் என விலகிவிடுவோம். அதேபோல் எங்களுக்கு வரும் அழைப்புகள் அனைத்தும் நண்பர்கள் வாயிலாக தான் வருகின்றன. அதிலும் மென்பொருள் துறையில் வேலை செய்யும் நண்பர்கள் தான் அதிகமாக இந்தப் புகைப்பட ஆவணங்களை பதிவு செய்ய விரும்பிக் கேட்கின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா எனப் பல இடங்களுக்குச் சென்று திருமணப் புகைப்படங்கள் எடுத்துள்ளோம். ஆந்திராவில் இரவில் ஆரம்பித்து விடியவிடிய திருமணம் நடக்கும். இதுவரை நாங்கள் சுமார் 40 திருமண அழைப்புகளுக்குச் சென்றுள்ளோம்” என்கிறார் அவர்.

“ஒரு திருமண அழைப்பிற்கு ரூ.50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பணம் வாங்குகிறோம். குறைந்தது ஒரு திருமணத்தில் ஆயிரம் புகைப்படங்கள் எடுப்போம். அதிலிருந்து முந்நூறு புகைப்படங்களை ஒரு கதை போல் அடுக்கி ஆல்பம் தருகிறோம். எங்கள் புகைப்படப் பதிவில் மரபு சார்ந்த நிகழ்வுகளும், நமது குடும்ப உறவுகளில் காணப்படுகின்ற யதார்த்தமான மகிழ்ச்சியும், அந்த தருணங்களில் நிகழ்ந்த மன உணர்வுகளும் நிச்சயம் கொட்டிக் கிடக்கும்” என்கிறார்கள் இவர்கள்.

மே, 2013.